ஏதோ சொல்ல நெஞ்சம் துடிக்குதே - அத்தியாயம் 3
அனுலேகா தனியே சுற்றிப்பார்க்க வெளியே செல்ல, அவளை யாரோ பின்தொடர்வது போல உள்ளுணர்வு தோன்ற, திரும்பிப் பார்க்காமல் நேரே அறைக்கு செல்ல நடந்தாள்.
ரிசார்ட்டை நெருங்கும் போது, அவளின் எதிரே, அவளின் ஆருயிர் இல்லா கணவன் அவளை நோக்கி நடந்து வர, அதனை சாக்காக பிடித்துக் கொண்டாள்.
"என்னை பிரிஞ்சுக் கொஞ்ச நேரம் கூட இருக்க முடியலையா ஹார்ப் (யாழ் - தமிழ் இசைக்கருவி)" என்று அவனை கட்டிப்பிடித்துக் கொண்டு திரும்பி, யாரேனும் இருக்கிறார்களா என்று நோட்டம் விட்டாள்.
"ஏய் என்ன பண்ற... தள்ளி போ... நானா உன்னை தள்ளிவிட்டா உனக்கு தான் அசிங்கம்" என்று அடிக்குரலில் வார்த்தைகளை கடித்துக் குதறினான்.
அதற்குள் அவளும் யாரும் தன்னை இப்போது தொடரவில்லை என்று அறிந்து, அவனை விட்டு விலகினாள்.
"உன்னை கட்டிப்பிடிக்க நான் ஒன்னும் இங்க காத்துட்டு இல்ல. என்னை யாரோ ஃபாலோ பண்ண மாதிரி இருந்துச்சு. அதான் என் கூட ஒருத்தர் துணைக்கு இருக்கான்னு தெரிஞ்சா, திரும்பி போயிடுவாங்க ன்னு நினைச்சேன்.. நான் நினைச்ச மாதிரியே யாரும் அங்க இல்ல.. எனிவே தேங்க்ஸ்.." என்று விலகி அறைக்கு செல்ல எத்தனித்தாள்
அவள் சொன்னது உண்மையோ என்ற நினைப்பில், யாழினியன் சற்று தூரம் நடந்து சென்று யாரேனும் சந்தேகத்துக்குரியவர் தென்படுகிறார்களா என்று தேடிவிட்டு வந்தான்.
அவளிடம், "அங்க யாரும் தப்பா இல்ல.. நீயா எதையாவது கற்பனை பண்ணி உளராத.. இது டூரிஸ்ட் ஸ்பாட்... ஆயிரக்கணக்கான பேர் வருவாங்க போவாங்க.... ஆமா சொல்லாம நீ பாட்டுக்கு வெளியே சுத்தினா, வெளிய உன்னை தேடி நான் அலையனுமா..? உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க?"
"நான் என்ன நினைச்சா உனக்கென்ன? ஆமா எதுக்கு என்ன தேடின? அதை சொல்லு முதல்ல?" என்று அவள் கேட்க,
அவளை நோக்கி கண்டனப் பார்வையை வீசியவன், "நாளைக்கு காலைல, நாம இங்கேயிருந்து கிளம்பறோம்.. ஒன்பது மணிக்கு ஃபெர்ரி (government ferry) போர்ட் பிளேர்க்கு கிளம்பிடும்.. அதுக்கு முன்ன போர்டிங் பாயிண்ட் போகணும் அதை சொல்ல தான் தேடினேன்.. ட்ரெஸ் பேக் பண்ணிடு.."
"இன்னிக்கு வாங்கிட்டு வந்த ட்ரெஸ், அப்புறம் அந்த பட்டு சாரி எல்லாமே பேக்ல தான் இருக்கு.. சோ நோ ப்ராப்ளேம்.."
"லூஸா நீ... இல்ல லூஸு மாதிரி நடிச்சிட்டு இருக்கியா?.. சணல் பையை பிளையிட்ல அப்படியே தூக்கிட்டு வர போறியா" என்று கேட்க,
"ஹி..ஹி..ஹி.. சாரி.."
"சாரி எதுக்கும் உதவாது.. அந்த ட்ரெஸ் எல்லாத்தையும் எடுத்துக் கொடு.. என் பெட்டில வைக்கிறேன்.. அப்புறம் சென்னை போனதும் எடுத்துக்கோ" என்று யோசனை சொன்னான்.
அவன் சொன்னபடி அவள் துணிகளை அவனிடம் கொடுத்தவள், இன்னொரு பை ஒன்றையும் தந்தாள்.
"இது என்னது?" என்று புருவங்களை நெறித்துக் கேட்டான்.
ஒரு பெருமூச்சை வெளியிட்டு, "அதனுள் இருந்த உள்ளாடைகளை எடுத்துக் காட்டினாள்"
"சாரி" என்பது இப்போது அவனது முறை ஆனது.
"உன்கிட்ட அப்படியே கவர் இல்லாம கொடுக்கக் கூடாதுன்னு இல்ல.. ஆனா எனக்கு என் லிங்கரிஸ் (lingerie) இப்படி வெச்சு தான் பழக்கம்.."
"அதான் சாரி சொல்லிட்டேனே!!.. இன்னும் என்ன விளக்கம்...? இதான் முதல் முறை, நான் ஒரு பெண்ணுக்கு ட்ரெஸ் வாங்கி கொடுத்திருக்கேன்.. ஹ்ம்ம்.. ஒருத்தருக்கு மட்டும் நான் தான் எல்லாமே வாங்கிக் கொடுக்கனும்ன்னு ஆசைப்பட்டேன். ஆனா என் அனு இப்ப என் கூட இல்லை.."
"என்ன இவன்... திடீர்னு சோக கீதம் வாசிக்கிறான்" என்று தனக்குள் முணுமுணுத்தாள்.
பிறகு, "யாருக்குமே ட்ரெஸ் வாங்கி கொடுத்ததில்லையா.. உன் அம்மாக்கு கூடவா?"
"இல்லை.. அவங்களே தான் வாங்கிப்பாங்க... அண்ட் எனக்கு வெளிய அம்மாவோட போறதுக்கு எல்லாம் நேரம் இல்லை"
"என்னது? நேரமில்லையா.... சுத்த வேஸ்ட் நீ"
"ஏய்.." என்று அவன் எகிற,
"ஆன்னா ஊன்னா ஏய், ஏய் ன்னு கூவிட்டு இருக்க...? இவருக்கு அம்மாவோட பொழுதைக் கழிக்க நேரமில்லையா? என்ன கலர் கலரா ஸீன் போட்டுட்டு இருக்க?"
"உனக்கு இந்த ட்ரெஸ் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கேன்... பார்த்து பேசு.." என்று அவனும் அவளோடு சண்டையில் சங்கமிக்க, அங்கே ஒரு மூன்றாம் உலகப்போர் அளவிற்கு வாய்ப்போர் சம்பவிதத்தது. வாய்க்கா தகராறு கூடத் தீர்த்து வெச்சுடலாம் போல; இந்த வாய் தகராறு பெரும் தொல்லை ப்பா... என்று அந்த அறையின் சுவர்கள் புலம்பும், அதற்கு வாய் இருந்தால்!!
இருவரும் சாவகாசமாக யுத்தத்தை.. அட அதே வாய் யுத்தம் தான்!!...நிறுத்தி, ஒருவழியாக பெட்டியில் உடமைகளை எடுத்து வைத்து, தூங்கச் சென்றனர். எப்போதும் போல, அவள் வரவேற்பறையிலும், அவன் படுக்கையறையிலும் உறங்கினார்கள்..
மறுநாள் காலை, ஆறு மணிக்கு எழுந்தவன், அவள் இன்னும் கவிழ்ந்துப் படுத்து தூங்குவதைக் கண்டு, அவன் போனை எடுத்து, அலாரம் அடுத்த ஐந்து நிமிடத்தில், அலறுமாறு மணியை பொருத்தி, அவள் கை எட்டும் தூரத்தில் அவனது போனை வைத்துவிட்டு, குளியலறைக்குள் நுழைந்தான்.
அவன் காலைக் கடன்களை முடித்து குளித்து, உடையணிந்து தயாராகி வெளியே வந்தான்.
"கும்பகர்ணி.. எப்படி தூங்கறா பாரு... இவளை..." என்று வாய்க்குள் முணுமுணுத்தவன்,
"ஆமா என் போன் எங்க? இவளை எழுப்ப, அலாரம் வெச்சு இங்க தான் டீபாய்ல வெச்சேன்... காணுமே..." என்று உரக்கவேக் கூறி, சோபா மேல, கீழே என்று தேடியவனைக், கண்களை முழுவதும் திறக்காமல், பாதி திறந்த விழிகளால் காண, அவளுக்கு சிரிப்புத் தோன்றியது.
பின் மெதுவாக எழுந்து, பூனை நடை நடந்து அவன் பின்னே நின்றாள். அவன் மீண்டும் அறைக்கு, போனை தேடிச் செல்ல, அங்கேயும் கிடைக்காமல், "இந்த ராட்சஷி தான் எடுத்து வெச்சிட்டு அலைய விடறா" என்று தனக்கு தானே பேசியவனிடம்,
"அந்த போன் இதுவா பாரு..?" என்று அவன் பின்னொடு சென்று நின்றுக் கொண்டு, மெல்லியக் குரலில் வினவ,
அவன் வேகமாகத் திரும்பி, அவளிடம் உள்ள போனை பிடுங்கப் போக, அவள் விளையாட்டிலும் பதட்டத்திலும், பின்னால் நகர, அவனது கால் இடறி, அவள் மல்லாக்க விழப் போனாள். ஒரு நொடியில், விழப் போனாள் என்பது போய், விழுந்தே விட்டாள்.
"அம்மா" என்று ஒரு அலறல் சத்தம்..
"அடப்பாவி! ஏண்டா இப்படி பண்ண? ஒரு கை கொடுத்து நான் விழறதை தடுத்து நிறுத்திருக்க வேண்டியது தான?... அம்மா வலிக்குதே"
"ஷ்...கத்தாத... எழுந்திரு.." என்று அவள் முன்னே கை நீட்டினான்.
அவளோ "ஒன்னும் வேணாம் போ..." அவன் கையைத் தட்டி விட்டாள் தோளை குலுக்கியவன், அங்கே இருந்த நிற்காலியில் அவளுக்கு எதிரே அமர்ந்து தன் போனை நோண்ட ஆரம்பித்தான்.
அவளுக்கு எழ முடியாத இயலாமையில், மூச்சை புகைவண்டிப் போல இழுத்து விட்டாள். முதலில் கைகளை ஊன்றி எழ முயற்சித்தவளை, அப்போது எதிர்பாராத நொடியில், அனுவை அலெக்காகத் தூக்கினான்.
அதில் அவனது தோளில் பிடிமானத்திற்காக கைபோட்டவள், வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். யாழினியன் அவளை படுக்கையறைக்கு தூக்கிச் சென்று கட்டிலில் முதலில் உட்கார வைத்து பின் குப்புற படுக்க, உதவினான்.
தன் பெட்டியில் இருந்த வலி நிவாரணியை அவளின் இடுப்பில் தெளிக்க, அவள் ஆடையை மேலே தூக்க முயன்றவனை "ஏய் என்ன பண்ற? கொன்னுடுவேன்... நீ தப்பா நடந்துக்க நினைச்சா கூட, முக்கியமான நரம்பை கட் பண்ணிடுவேன்... தெரிஞ்சுக்கோ!!" என்று பொங்க, அவன் தலையில் அடித்துக் கொண்டான்.
"வலிக்குது ன்னு சொன்னியே ன்னு உனக்கு மருந்து போட வந்தேன் பாத்தியா... என்னை தான் செருப்பால அடிச்சுக்கணும், நல்லா பாத்துக்கோ, என் கையில என்ன இருக்குன்னு... இந்த ஸ்ப்ரே தான்... இப்ப திரும்பு" என்று பல்லைக் கடித்தவனை மீண்டும் கோபம் மூட்டாமல், அவளே டி-ஷர்ட்டை சற்றே மேலே தூக்கிவிட்டு படுத்தாள்.
இனியன், கருமமே கண்ணாக மருந்தை தெளித்தான் என்று சொல்வதற்கு இயலாது, அவளின் இடை வளைவும், முதுகின் அடி பாகமும் அவனை இம்சிக்கத் தான் செய்தது. இருந்தாலும், அவளின் முன் தான் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவன் என்று காண்பிக்க வேண்டும் என்ற வீராப்பு அவனை தட்டி எழுப்பியது.
"எழுந்திரு... மருந்துப் போட்டாச்சு.." என்று சொல்லி நகரப் போனான்.
"தேங்க்ஸ்" என்க,
"ரொம்ப சந்தோஷம்" என்று இரு பொருள்படும் படியாக அவன் உரைத்தான்.
கூடவே, "இன்னொரு விஷயம்... நானெல்லாம் உன்கிட்ட மயங்க மாட்டேன்... ஏன்னா, பத்து பண்ணண்டு வருஷத்துக்கு முன்ன நீ பப்ளியா பார்க்க நல்லாவே இருந்த... இப்ப ஒட்டகச்சிவிங்கிக்கு பேண்ட் ஷர்ட் போட்ட மாதிரி இருக்க" என்று விழிகளை சுருக்கி, இதழை வளைத்துக் கூறியவன், பின் தனக்கு தானே, "இனியா எஸ்கேப்" என்று உரைத்து, வெளியேச் சென்றான்.
அவன் வார்த்தைகளை செவிமடித்தவளோ, திக் பிரமைப் பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள்.
'என்னது பப்ளியா?!.. இந்த மாதிரி அவன் அன்னிக்கு சொல்லியிருந்தால், இன்று இந்த நிலைமை வேறல்லவா?..
ம்ம்ஹூம் இல்லை அவன் வேண்டுமென்றே என்னை குழப்பறான்... அனு நீ ஸ்ட்ராங்கா இரு.. அவன் வேற ஒரு பெண்ணை காதலிக்கிறவன்.. அதுவும் அந்த பொண்ணு உன்னோட ஃப்ரெண்ட் வேற... நீ துரோகம் பண்ணாத... என்னிக்கோ நடந்தது, நடந்து முடிஞ்சதாவே இருக்கட்டும்...
அதுக்கு இப்ப அவன்கிட்ட விளக்கம் கேட்கிறது கூட மடத்தனம். பி ஸ்டெடி (be steady)' என்று மனதிற்குள் தனக்கு தானே அறிவுறுத்திக் கொண்டாள்.
அன்றைய தினம் ஊருக்கு கிளம்ப வேண்டியவர்கள், அவளின் வலியால், அடுத்த நாள் கிளம்ப முடிவு செய்து, அதை அவளிடமும் தெரிவித்து இருந்தான்.
அதன்படி, மறுநாள் அரசு ஃபெர்ரியில் (பயணத்திற்கான படகு) போர்ட் பிளேர் சென்று, அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்தனர்.
இரண்டு மணிநேர விமான பயணத்தில், இருவரும் பேசவில்லை. அவன் பொருளாதாரம் பற்றிய புத்தகம் ஒன்றை வாசிக்க, அவளோ, தூங்க ஆரம்பித்தாள்.
விமான இருக்கையில் வாட்டம் இல்லாமல், ஒருகளிக்க முயற்சி செய்து, உறங்கியவள், தூக்கத்தில் அவனை கட்டிப்பிடிக்க, இனியன் பதறிவிட்டான்.
உடனே திரும்பிப் பார்த்தவன், அவள் தூக்கத்தில் கை போட்டதைப் புரிந்து, அமைதியானான். ஆனால் மனதில் ஒரு கிளர்ச்சி உண்டானது. புது மாப்பிள்ளை, என்ன தான் அவள் மனைவி இல்லை என்றுக் கூறினாலும், ஒரு பெண்ணுடன் சகஜமாக பேசினாலும், மனதில் அவள் மனைவி தான் என்று பொறிக்கப்பட்டதை, அவன் உணரவில்லை. உணரும் அவகாசம் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மனம் என்பது ஒரு விசித்திரக் குரங்கு. நினையாதே மனமே என்றால், அதை நினைப்பது தான் மனதின் வேலையாக இருக்கும்.
உலகில் கட்டடங்களில் அதிசயம், இடங்களில் அதிசயம் என்று மனிதன் கண்டுபிடித்து பரவசம் அடைந்தாலும், உண்மையில் உலகில் அதிசயபிறவி என்றால் அது மனிதன் தான்.. அவன் மனதில் உருவாகும் எண்ணங்களும் தான்.
Yar vanthiruppa pinnadi ivalai thodarnthu? Paren manjal kayiru magic ah? Sandai yeppo samathanam ah maarum? Appo ava bubbly ah iruntha nu ivanukkepdi theriyum? Atha iva gavanikkalaiyo? Waiting for next epi ranju ma
ReplyDeleteSaran vaa da. Saravanapriyan
ReplyDeleteSuper story dear thank you so much 😊😘☺
ReplyDelete