மண(ன)ம்
அந்த பிரம்மாண்ட மண்டபம் வெகு விமரிசையாக அலங்கரிக்கப்பட்டு, வாழைப்பந்தலும், மாவிலை தோரணுமும், இருவீட்டாரின் வரவேற்பு பலகையும், மணமக்களின் பெயர்களை தாங்கி நிற்கும் பலகையும் காட்சிப்படுத்தப்பட்டு விழாக்கோலம் பூண்டுயிருந்தது.
சுற்றமும் நட்பும் அங்கே வந்து தங்கள் வாழ்த்துக்களை மணமக்களுக்கு தெரிவிக்க காத்திருந்தனர். நெடு நாள் கழித்து காணும் உறவுகளோடு அன்போடும், மகிழ்வோடும், அளவளாவி கொண்டிருந்தனர்.
மங்களகரமான நாளில் உறவுகளை கண்டதும் மனம் குதூகலம் அடைய, மண்டபம் முழுவதும் பேச்சுக்குரல்கள் கேட்டவாறே இருந்தது.
மணமேடையில், மாப்பிள்ளையாக அர்ஜுன் அமர்ந்து ஐயர் ஓதும் மந்திரங்களை அப்படியே வாங்கி அக்னிகுண்டம் முன் கம்பீரமாக கூறி கொண்டிருந்தான்.
அவன் முகத்தில் அப்படியொரு தீட்க்ஷண்யம். 'நான் விரும்பிய வாழ்க்கை எனக்கு அமைந்துவிட்டது' என்று மகிழ்ச்சியுடன் அவ்விடத்தில் வீற்றிருந்தான்.
ஆனால் அவன் உணர்ச்சிகளுக்கு நேர்மாறாக, அவன் குடும்பம் வருத்தத்துடன் நிகழ்ச்சிகளையும், பொறுப்புகளையும் அவதானித்து கொண்டு, இங்கும் அங்கும் செயலாற்றி கொண்டிருந்தனர்.
மகனின் திருமணத்தில் பெற்றவர்கள் ஏன் வருத்தம் கொள்ள வேண்டும்.. பெண்ணை பெற்றவர்களும் இப்படி தான் வியாகூலம் அடைகின்றனரோ???
அங்கே பெண்ணை பெற்றவர்கள் முகம் சந்தோஷமும், வருத்தமும் ததும்ப பெண்ணின் அறையை அவ்வப்போது ஒரு பார்வை பார்த்தபடி கல்யாண வேலைகளையும், உறவினர்கள், விருந்து உபச்சாரங்களையும் கவனிக்கலாயினர்.
அவர்களுக்கோ பெண்ணின் வாழ்க்கை நல்லபடியாக அமையுமா, எவ்வாறு சமாளிக்க போகிறாள், அவள் உடலில் உள்ள குறை வாழ்க்கையை பாதிக்குமா, என்று ஏகப்பட்ட கேள்விகளோடு கூடிய மனக்குழப்பம்....
பிள்ளைகள் தங்கள் வாழ்க்கை துணையின் கரம் பிடிக்க போகும் இந்த இனிய நாளில் பெற்றவர்கள் மகிழ்வை காட்டுவதை விட கடமைக்கு நிற்கின்றனர் அங்கே...
ஒருவேளை பெற்றோர் தங்கள் சம்மதத்தை தெரிவிக்காத காதல் மணமோ.. இதெல்லாம் இந்த காலத்தில் சகஜம் அல்லவா.. இன்றைய காலகட்டத்தில் பெற்றோர் பலர் இதை சிந்திக்காமல் நல்ல விதமாக தானே பிள்ளைகளின் விருப்பத்திற்கு மதிப்பளித்து நடத்தி தருவார்கள்... பெண்ணை பற்றிய விஷயம் தெரிந்த சிலர் தங்களுக்குள்ளேயே இப்படி பலவாறு யோசித்தனர்.
'பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ' என்று ஐயர் குரல் கொடுக்க, பெண் மேடைக்கு வரும் கொலுசின் மெல்லிய சிணுங்களோடு கூடிய காலடி சத்தம், பட்டுப்புடவை சரசரக்கும் ஓசையை கேட்டதும், எல்லோரும் ஆர்வத்தோடு மணமேடையை பார்த்து கொண்டிருந்தனர்.
அங்கே மெதுவாக விந்தி விந்தி நடந்து வந்த பெண்ணை கண்டதும், பெரும்பாலோரின் குரல் சலசலப்பு சத்தம் அந்த மண்டபம் முழுவதும் எதிரொலிக்க, அதை கேட்டு பெண்ணின் பெற்றோர் கவலையடைய, பிள்ளையின் பெற்றோரோ தங்கள் மகன் மேல் சொல்லொணா கோபமும், வருத்தமும் ஒருங்கே மனதில் எழுந்தது. இருந்தாலும் சபை நாகரிகம் கருதி அமைதி காத்தனர்.
அந்த மண்டபத்தில் எந்த சலசலப்புக்கும் காது கொடுக்காது, தன்னவளின் மேல் பார்வை பதித்திருந்தான் அர்ஜுன்.
அவன் அருகே அமர்ந்தவள் திரும்பி கலங்கிய கண்களோடு அர்ஜுனை பார்த்தாள் மைத்ரேயி.
அவளும் தான் தன்னை பற்றிய பேச்சுக்களை கேட்டிருந்தாளே.
அர்ஜுன் பார்வையால் புருவத்தை உயர்த்தி என்ன ஆயிற்று என்று வினவ,
அவளோ "திருமணத்தை நிறுத்திவிடுவோமா" என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் வருத்தத்தோடு வினவினாள்.
மைத்ரெயி மனதின் ஒரு பக்கம், 'இந்த திருமணம் தடைப்படக்கூடாது' என்று வேண்டுதல் வைக்க, இன்னொரு பக்கம், 'என்னால் ஏன் அர்ஜுன் அவமானப்பட்டு நிற்க வேண்டும்.. என்னை மணப்பதால் அவர் வாழ்க்கை பாழாக கூடாது' என்று வாதாடியது.
அவள் மனதில் நிகழும் பட்டிமன்றதிற்கு, அவளால் ஒரு தீர்ப்பை தர இயலவில்லை.
"ஊர் வாய்க்கு பயந்தால் நாம் வாழ முடியாது மைத்தி.. நீ என்னை தான் கணவனாக ஏற்றுக்கொள்ள போகிறாய். என் மனதில் எந்தவித மாற்றமும் இல்லை. என் வாழ்வின் சரிபாதி நீதான். அது என்றுமே மாறாது. உனக்கு என்னை பிடிக்காமல் இதை சொன்னால் என்னால் ஏற்று கொள்ள முடியும். ஆனால் உனக்கு பிடித்தம் இருந்தும் மற்றவர்கள் பேச்சுக்காக என்னை நிராகரிப்பது நியாயம் இல்லை" என்று தீர்க்கமான பார்வையுடன் உறுதியாக கூறினான்.
அதை கேட்ட மைத்ரேயி "எந்த ஜென்மத்தில் என்ன பாக்கியம் செய்தேன்.. இப்படி ஒரு நல்லவர், என் குறையோடு என்னை ஏற்று கொண்டு வாழ ஆசைப்படுபவரை கணவனாக அடைவது கடவுள் எனக்கு தந்த வரம். நன்றி கடவுளே" என்று நன்றி சொன்னவள்,
மேலும், "என் புகுந்த வீட்டில் உள்ளவர்களை நான் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். எல்லோருக்கும் என்னை பிடித்து ஏற்று கொள்ள வேண்டும். என் வாழ்வில் இன்பம் பெருகி, குடும்பம் சிறக்க, நீ அருள் புரிய வேண்டும்" என்று மனதார பிரார்த்திக்க, அப்போது ஐயர் கெட்டி மேளம், கெட்டி மேளம், என்று குரல் எழுப்பி, மந்திரம் கூறி மாங்கல்ய தாரணம் செய்ய அர்ஜுனிடம் தாலியை கொடுத்து கட்ட சொன்னார்.
அவனும் பூரிப்புடன் அவளை கண்களால் வருடி, இதயத்தில் இருத்தி, மாங்கல்யம் அணிவித்து, தன் உயிரில் சரிபாதியாக்கி கொண்டான். அவள் மைத்ரேயி அர்ஜுன் ஆனாள் (லைசென்ஸ் கொடுத்துட்டாங்க)
மண்டபத்தில் உள்ள மனிதர்களின் பூ தூவி ஆசியோடு அக்கடவுளின் ஆசீர்வாதமும் அவர்களுக்கு கிட்டியது.
எல்லோருக்குமே ஒவ்வொரு விதமான கேள்வி மனதில் ஓடி கொண்டிருந்தது. மாப்பிள்ளையோ ஆணழகன், இவன் எப்படி அந்த பெண்ணை மணந்தான். அவனுக்கும் வெளியே சொல்ல முடியாத குறை இருக்குமோ, பணத்துக்காக நடந்த கல்யாணமோ, காதல் மணமோ, மகனுக்கு ஏற்ற பெண்ணை தேடாமல் இந்த பெற்றவர்களுக்கு எங்கே போனது புத்தி போன்ற எண்ணற்ற எண்ணங்கள் அங்கே சூழ்ந்து தான் இருந்தது...
மேலும் சில சடங்கு சம்பிரதாயம் முடிந்து மணமக்களின் வரவேற்பும், புகைப்படமும் எடுக்க ஆயத்தமானார்கள்.
சிலர் நாகரிகமாக, மணமக்களின் தோற்றம், பொருத்தம், எண்ணம் என எதையும் ஆராயாமல் வாழ்த்து சொல்லி விலகினர். ஆனால் எப்படியும் எங்கேயும் ஒரு கூட்டம் இருக்குமே, அடுத்தவர்களின் அந்தரங்கம், அவர்கள் செய்யும் செயல்கள், அவர்களின் வாழ்க்கைமுறை என அனைத்தையும் தேவையில்லாமல் ஆராய்ந்து அலசி கருத்து தெரிவிக்கும் கூட்டம்.
அப்படி ஒருவர் மணமக்கள் அருகே வந்து அர்ஜுனிடம், "ஏம்ப்பா, நீ ராஜாவாட்டம் இருக்க, நீ சரின்னு சொன்னா உன்னை கட்டிக்க லைன்கட்டி நிக்க பொண்ணுங்க வருவாங்க.. ஆனா என்னமோ ஊர்ல இல்லாத பொண்ணா ஒரு காலில் ஊனமா இருக்கிற பொண்ணு தான் கிடைச்சிதா.. நீ இவளை கட்டிக்கிட்டு என்ன கஷ்டபட போறியோ" என்று அங்களாய்ப்பது போல் மைத்ரேயின் காயத்திலே கத்திக்கொண்டு திருகினார் அந்த பெண்மணி.
அர்ஜுனோ உங்களின் வம்பு பேச்சுக்கு நான் பதிலடி கொடுப்பேன் என்பது போல் அவர்களை பார்த்துவிட்டு மைத்ரேயியை பக்கம் திரும்பி பார்த்து மெல்லிய புன்னைகையுடன் அவள் முன் தன் கைகளை நீட்டினான்.
மைத்ரேயி நீர்த்திரையிட்ட விழிகளுடன் அவனை நோக்கி தன் கைகளை அவன் கரங்களின் மேல் பதிக்க அவனோ இறுக்கி பிடித்து கொண்டு அவர்களிடம் திரும்பி "ஆன்ட்டி, எனக்கு என் மைத்தியை தான் பிடிச்சிருக்கு. அவளுக்கு உடம்புல தான் குறைப்பாடு. அதுவும் அவளால் முடியாதது என்று எதுவும் இல்லை. அவள் காலில் சிறு ஊனம் தான். அதுக்காக அவள் நடக்காம இல்ல, தன் வேலையை தானே தான் பார்த்துகிறா.. அது மட்டுமில்ல அவளால் யாருக்கும் உபத்திரவம் இல்ல.. உபகாரம் தான். அதனால தான் இவளை மாதிரி இருக்கிறவங்களை differentially abled (மாற்றுத்திறனாளிகள்) என்று சொல்றாங்க. உடம்புல ஊனம் இருக்கிறது தப்பில்லை ஆன்ட்டி.. மனசுல ஊனம் இருக்கிறது தான் தப்பு" என்று சொன்னவன் பார்வையில், "உங்களை மாதிரி' என்று அர்த்தம் பொதிந்து இருந்தது. அதன் பின் அவர்கள் அவன் முன்னே நிற்கவா போகிறார்கள்..
ஆனால் அருகில் இருந்த மற்றொருவர், "என்னப்பா புரட்சி கல்யாணமா... அம்மா புது பொண்ணு, குறை இருக்கிற உன்னை போய் மனைவியா ஏத்துகிட்டதுக்கு, நீ அவனுக்கு காலம்பூரா நன்றி சொல்லணும்" என்று வாயில் அவல் மெல்ல ஆசைப்பட்டு இருவரிடமும் சொல்ல,
"புரட்சி இல்லை. என் சொந்த வாழ்க்கையில் அசட்டுத்தனமாக இதுக்கெல்லாம் புரட்சி என்று பெயர் வைக்க மாட்டேன். எனக்கு இவளை பிடிச்சிருக்கு. அதனால் தான் வாழ்க்கை துணையாக கைபிடித்தேன். எப்போது தாலி கட்டினேனோ, அப்போதே என்னில் பாதியாகி விட்டாள். சோ எனக்கு நானே நன்றியுரைக்கவோ, பெருமையடையவோ, புரட்சி என்று கர்வம் கொள்ளவோ மாட்டேன்." என்று நச்சென உரைத்தான் அர்ஜுன்.
மைத்ரெயி தான் உணர்ச்சியின் விளிம்பில் தத்தளித்து கொண்டிருந்தாள். அவன் பேசிய 'மனசுல தான் ஊனம் இருக்க கூடாது' என்ற ஒரு வாக்கியத்தில் அவளின் தாழ்வு மனப்பான்மையை போக்கி விட்டானே.
அவன் பேசிய பேச்சில் அந்த மண்டபத்தில் பல பேருக்கு அறிவுகண் திறந்துவிட்டது அவனின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட. அவனின் பெற்றவர்களும் இன்முகத்தோடு தங்கள் வீட்டுக்கு வரும் மருமகளை வரவேற்க முடிவெடுத்தனர்.
ஆம் தானே... கடவுளின் படைப்பில் அனைவரும் சமம். அவனின் படைப்பில் குறை கூறுவது மனிதர்களுக்கு ஏது தகுதி. ஒரு சில காரணங்களுக்காக சில மனிதர்களை மாற்று திறனாளிகளாக படைத்து இருக்கிறான். அதற்காக அவர்கள் தாழ்ந்தவர்கள் அல்ல. அவர்களுக்கும் ஒரு மனம் இருக்கிறது, வாழ்க்கை இருக்கிறது, ஆசை பாசம் இருக்கிறது, மனதில் உத்வேகம் இருக்கிறது.
அவர்களை போற்ற வேண்டாம்.. குறைந்தபச்சம் தூற்றாமல், சக மனுஷனாக பாவித்தால் போதும். இப்பூவுலகில் ஜனித்த ஒவ்வொரு உயிரணத்துக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது, உரிமை இருக்கிறது.
Comments
Post a Comment