ஏதோ சொல்ல நெஞ்சம் துடிக்குதே - அத்தியாயம் 2
அத்தியாயம் - இரண்டு
கல்யாணம் பற்றிய கனவுகளில், திருமண தேதி நெருங்கி வர வர, யாழினியன், தூங்கும் நேரம் குறைந்தது
திருமண இரவும், யாழினியன் தூங்காமல் ஐஸ்வர்யா என்கிற அனுலேகாவின் செயல்களை பற்றியே ஆராய்ந்துக் கொண்டிருந்தான். எனினும் டான்னென மறுநாள் காலை ஆறு மணிக்கு எழும்பினான்.
படுக்கையறை விட்டு வெளியே வந்தவன், அங்கே சோபாவில் குப்புற படுத்து தூங்குபவளைக் கண்டு உள்ளுக்குள் கடுப்பும், இயலாமையும் ஒருங்கே வந்தது.
ஏழு மணி ஆகியும் ஆழ்ந்து தூங்குபவளை கண்டு லேசாக பொறாமை வந்தது அவனுக்கு.
சிறு யோசனைக்குப் பிறகு, மீண்டும் உள்ளே சென்றவன் படுக்கையிலிருந்து ஒரு போர்வையைக் கையில் எடுத்தான். சட்டென அதை கீழே போட்டுவிட்டு, ஒரு தலையணை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
வெளியே வரவேற்பறைக்கு வந்தவன், அவள் அருகில் செல்லாமல், தூர நின்று, தலையணையை ஓங்கி அவள் மீது வீசினான்.
அவன் வீசிய தலையனையால் பெரிய தாக்கம் இல்லையென்றாலும், அரைகுறை விழிப்பில் இருந்தவள், முழுவதுமாக எழுந்து உட்கார்ந்து அவனை முறைத்தாள்.
"என்ன லுக்கு... ப்பா... பார்க்க முடியல... குழந்தைப் புள்ளைய பயமுறுத்தாத... எந்திரிச்சு போய் கிளீன் ஆயிட்டு வா.. உன் கூட பேசணும்" என்று அதட்ட, அவள் முறைப்பை நிறுத்தவில்லை.
"இவன் குழந்தையாமா? கல்யாணம் பண்ணி கசமுசாக்கு பிளான் போட்டவன் எல்லாம் குழந்தைன்னா, பூமி தாங்குமா?!" என்ற அவள் முணுமுணுப்பு கேட்டு, அவன் முகத்தை அஷ்டக்கோணலாக்கி, அசடு வழிய வைத்தது.
அந்த வெட்கத்தை கலைக்க, "உனக்கு காலைல குடிக்க என்ன பிடிக்கும்ன்னு எனக்கு தெரியாது.. காபி, டீ ரெண்டும் இருக்கு.. எது வேணுமோ பிரஷ் பண்ணிட்டு வந்து குடி... கவுண்டர் ஏரியால வேணுங்கிற பால் பவுடர், காபி, டீ பாக்கெட்ஸ் இருக்கு..." என்று இனியன் சொல்லி முடிக்க, அவளும் மௌனமாக எழுந்துச் சென்றாள்.
அனுலேகா, அறையில் இருந்த எலக்ட்ரிக் கெட்டிலில், தண்ணீர் நிரப்பி, அது சூடானதும், டீ பாக்கெட்டை அதில் கிடத்தி சிறிது நேரம் கழித்து, குடித்து விட்டு அவன் எதிரே நின்றாள்.
"என்கிட்ட என்ன பேசணும்? சீக்கிரம் சொல்லுங்க.. எனக்கு தூக்கம் வருது" என்றாள் அவள். அந்த பதில் அவனை ஆச்சரியம் கொள்ள வைத்தது.
'என்னது மறுபடியும் தூக்கமா...' என்று மனதில் மட்டும் நினைத்தான்.
பின்பு, "என் அனுலேகா நீயில்லை. அனு நான் காத்திருப்பேன் ன்னு ரொம்பவும் நம்பிக்கையில் இருக்கா! ஆனா நான் தான் அவளோட நம்பிக்கையை பொய்யாக்கி தப்பு பண்ணிட்டேன். இப்ப அந்த தப்பை சரி செய்யணும் ன்னு நினைக்கிறேன்." என்றான் தீர்மானக் குரலில். அவன் முழுவதும் சொல்லி முடிக்கட்டும் என்று காத்திருந்தாள். எதுவானாலும் அவனே தொடங்கட்டும் என்கிற எண்ணம்!!
"ஊருக்குப் போனதும், விவாகரத்துக்கு என்ன வழிமுறைகள் ன்னு ஒரு லாயரை கேட்டு அதன் படி நாம செய்யலாம் ன்னு நினைக்கிறேன்.. உனக்கும் இதுல எந்த மாற்றுக்கருத்தும் இருக்காதுன்னு நம்பறேன்." என்று கூறி அவளை உற்று நோக்கினான்.
எந்த யோசனையும் இன்றி அவளும், "எனக்கு டபிள் ஓகே" என்றாள். கூடவே, "எப்ப கிளம்பனும்?" என்று கேட்க,
அவனோ ஒரு பெருமூச்செறிந்து, "இன்னும் இரண்டு மூன்று நாள் இங்க தான் இருக்கனும்" என்றான்.
அன்றைய நாள் மதியம் வரை அவர்களுக்குள், எந்த பேச்சுவார்த்தை இன்றி கழிய, மாலை நேரம், பொறுக்க இயலாமல், அனுலேகா யாழினியனிடம் சென்று, "எங்கேயாவது வெளியே போகலாமா?" என்று கேட்க, அவனோ கோபம் கொண்டான்.
"நோ உன் கூட ஜோடிப் போட்டு சுத்த, ஐம் நாட் யூர் ஹஸ்பண்ட்..!!!?" கத்தரித்தார் போல கூறவும், அவளுக்கும் ஆத்திரம் வந்தது.
"நோ.. ஐம் யூர் லீகல் வைஃப்" என்று அதே போல் கூறவும், அவன் பேச்சிழந்தான்.
மீண்டும் அவளே, "நம்ம நாட்டுல, ஒரு பெண்ணும் பையனும் கணவன் மனைவியா இருந்தா மட்டும் தான் ஒன்னா வெளியே போகலாம் ன்னு எந்த சட்டமும் எனக்குத் தெரிஞ்சு இல்ல.. ஃப்ரெண்ட், கூட வேலை பாக்கறவங்க, அவ்வளவு ஏன் டூர் போகும் போது கூட பையனும் பொண்ணு சேர்ந்து போனா ஒன்னும் சொல்ல மாட்டாங்க"
"..."
"சரியான கற்கால மனுஷன்..." என்று அவன் காதில் விழவேண்டும் என்பதற்காகவே உரக்க சொன்னவள், "நீ வரலைன்னா நான் தனியா போறேன்.. ரூமுக்குள்ளேயே உட்கார்ந்து எனக்கு தலை வலிக்குது" என்கவே,
அவனும், "சரி நானும் வரேன் வா" என்று கூறவும், இருவரும் சேர்ந்து செல்ல, கதவருகில், அவளின் உடையைக் கண்டு,... "இந்த புடவை உனக்கு அவ்வளவு பிடிச்சிருக்கு என்பதற்காக இரண்டு நாளா அதையே போட்டுட்டு இருக்க.. வேற ட்ரெஸ் மாத்திட்டு வா" என்று அதட்டினான்.
அவளோ, "லூசா ப்பா நீ!.."
"ஏய்.. வார்த்தையை அளந்துப் பேசு.."
"பின்ன.. நான் என்ன உன்னோட தங்கறதுக்காக ட்ரெஸ்ஸ பொட்டி கட்டி எடுத்துட்டு வந்திருக்கேனா?? எல்லாம் அந்த ஐஸ் பண்ண வேலை.." என்று அவள் கத்த
"ஷ்... எதுக்கு இப்ப கத்திக் கூப்பாடு போடற... சரி வா... தாலியே கட்டிட்டேன், ரெண்டு செட் ட்ரெஸ் எடுத்துத் தர மாட்டேனா? என்று யாழினியன் சலிப்போடு நடந்தான்.. அவ்ளோ அவனை ஒரு மாதிரி பார்வை பார்த்துவிட்டு, கூடவே சென்றாள்.
ரிசார்ட் காரிடாரில் அவர்கள் நடந்து செல்ல, அவர்களை தாண்டிச் சென்ற இரு ஊழியர்கள் அவர்களை பற்றி தங்களுக்குள் பேசி சிரித்தார்கள். "
"கல்யாணம் ஆன நாள் உள்ள போனவங்க... இப்ப தான் வெளியே வராங்க... தீயா வேலை செஞ்சிருப்பாரோ மாப்பிள்ளை...!!"
"வெளியே போய் டைம் வேஸ்ட் பண்ண வேணாம்னு நினைச்சிருப்பாரு... அந்த பொண்ணு கல்யாண சேலையைக் கூட மாத்தல பாரு... நமக்கெதுக்கு வம்பு" என்று அவர்கள் பேசியது, காற்றுவாக்கில் மெல்ல, யாழினியன் காதில் விழ, அவன் முகம் கடுகடுத்தது.
அவ்வார்த்தைகள் அனுலேகா செவியிலும் படத்தான் செய்தது. இருந்தாலும் இதற்கெல்லாம் எதிர்வினை ஆற்றத் தேவையில்லை என்று நினைத்தாள்.
அதை அவனிடம் சொல்லவும் செய்தாள். "அவங்களை பொறுத்தவரை, நாம புது ஜோடி.. அவங்களுக்கு நாம நமக்குள் நடக்கிற கதையெல்லாம் சொல்ல அவசியமில்லைன்னு நான் நினைக்கிறேன். சோ மூஞ்ச இப்படி வெச்சு நீயே அவங்களை என்னவோ ஏதோன்னு சந்தேகப்பட வெச்சுடாத.." என்று சொல்லி, அவன் பேசும் முன், இரண்டு அடி முன்னே நடந்தாள்.
அவர்கள் தங்கும் இடம் ஸ்வராஜ் த்வீப் என்னும் ஒரு தீவு.. இந்த தீவில் தான் புகழ்பெற்ற ஹாவ்லாக் பீச், எலீஃபாண்ட் பீச் போன்றவை உள்ளது.
கூகிள் மேப் உதவியுடன், மார்க்கெட்டுக்குச் சென்று, ஒரு துணிகடையுள் நுழைந்தனர்.
அங்கே பல விதமான உடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, விற்பனையாளரிடம், அவள் ஜீன்ஸ் கேட்க, அவரும் கொண்டு வந்து காண்பித்தார்.
ஆனால் அவள் அளவிற்கு அதிகம் காணப்படவில்லை. இரண்டே இரண்டு ஜீன்ஸ் எடுத்தவள், ஒரு பத்து டி-ஷர்ட் எடுத்துக் கொண்டாள். அதுவரை எங்கோ ஓரமாக நின்று வெடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தவனை அழைத்தாள்.
அவனும் ஆச்சரியமாக, "பரவாயில்லை, ரொம்ப சீக்கிரமா எடுத்துட்ட, குட்.. வா போலாம்" என்று பணத்தைக் கட்டும் இடத்திற்கு செல்ல, அவளோ
"இங்க என் சைஸ்க்கு டாப்ஸ் இருக்கு, ஆனா ஜீன்ஸ் இல்ல... சீக்கிரமா பணம் கட்டிட்டு வா.. அடுத்த கடைக்குப் போகலாம்" என்று கூற, அவனோ அதிர்ந்தான். 'என்னது இன்னும் ட்ரெஸ் வாங்கப் போறாளா?' அதற்குள் பில்லை காண, அதில் இருந்த தொகையை கண்டு, என்ன சொல்வது என்று முழித்தான்.. இருந்தாலும் பணத்தைக் கட்டித் தானே ஆக வேண்டும்
"ஹே நில்லு... இரண்டு ஜீன்ஸ் எடுத்த சரி... அதென்ன பத்து டாப்ஸ் எடுத்திருக்க? நீ ஏதாவது கடை வைக்கப் போறியா இங்க? இருக்கப் போற நாலு நாளுக்கு, இவ்வளவு ட்ரெஸ் ஆ ஆ...?"
"ஜீன்ஸ், அடிக்கடி துவைக்கத் தேவையில்லை... ஆனா டாப்ஸ் அப்படியில்லையே.ம் அதான்... சரி சீக்கிரம் வா.. அடுத்த கடைக்குப் போகலாம்" என்று அனு பரபரக்க,
"ஏன் இங்க தொங்கிட்டு இருக்கிற ட்ரெஸ் எல்லாம் உன் கண்ணுக்கு தெரியலையா?"
"எனக்கு ஜீன்ஸ் மட்டும் தான் போடப் பிடிக்கும்.."
"சோம்பேறி... அதுக்காக ஒரே மாதிரி ட்ரெஸையே போட உனக்கு சலிக்கல..?"
"அதான் நீயே பதில் சொல்லிட்டியே... சரி நீ இவ்வளவு கெஞ்சி கேட்கறதுனால, நான் ஸ்கர்ட், கவுன் எல்லாம் எடுத்துக்கறேன், மீண்டும் துணிகளை ஆராயத் தொடங்கினாள் அவள்."
அதைக் கண்டு இனியன், "ஐயையோ தப்பு பண்ணிட்டமோ??! எடுத்த வரைக்கும் போதும்னு, பில் செட்டில் பண்ணிட்டு கிளம்பிருக்கணுமோ" என்று காலதாமதமாக யோசித்தான்.
கூடவே, "இவ என் கிரெடிட் கார்ட் பாலன்ஸை காலி பண்ணாம விட மாட்டா போலிருக்கே" என்றும் புலம்பினான்.. சத்தமில்லாமல் தான்!
ஆனால் உள்ளுக்குள் அவனது மனசாட்சி, 'அடேய் இதுவே அனு இல்ல.... ஐஸ்வர்யா இப்படி செலவு பண்ணியிருந்தா, இந்நேரம் நீயே போய் தேர்ந்தெடுத்து, கடையில இருக்கிற மொத்த துணியையும் வாங்கியிருப்ப! அவளும், என்னமோ நீ சம்பாதிக்கும் அத்தனை பணத்துக்கும் அவ தான் ஜவாப்தாரி ன்னு பேசுவா..'
'அது என் அனு... நான் காதலிக்கும் பொண்ணு.. அவளுக்கு நான் என்னவேணா செய்வேன்.. நீ கொஞ்சம் சும்மா இரு' என்று மனசாட்சியோடு எதிர்வாதம் செய்தான்.
"நீ காதலிச்ச பொண்ணோட நிஜ பெயர் கூடத் தெரியல... உண்மையா காதலிக்கிறனாம்... இங்க பாரு.. இனிமே இந்த பொண்ணு தான் உன் அனு.. நிஜத்தை புரிஞ்சுகிட்டு நல்லபடியா வாழப்பாரு.. ஏற்கனவே தெரிஞ்ச பொண்ண தான் நீ கல்யாணம் பண்ணியிருக்க.. நல்லா யோசி.. ஆண்டவன் விதிச்ச வாழ்க்கை போனா வராது.. பொழுதுப் போனாக் கிடைக்காது..' என்கிற பஞ்ச் டயலாக் ஒன்றை உதிர்த்துவிட்டு அமைதியாகி விட்டது யாழினியனின் மனசாட்சி.
ஷாப்பிங் முடித்துவிட்டு எங்கேயும் சுற்றிப்பார்க்க செல்லாமல், நேரே ரிசார்ட் அறைக்கே அழைத்து வந்துவிட்டான். அவளுக்கும் பெரிசாக ஊர் சுற்றிப்பார்க்க ஆசை எழவில்லை. எப்போதடா வீட்டிற்கு.. அதாவது விடுதி அறைக்கு செல்வோம் என்று எண்ணினாள்.
ஆனால் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருந்ததை, இருவருமே கவனிக்கவில்லை. அது என்னவென்றால், 'எப்போதடா இங்கிருந்து கிளம்புவோம்' என்கிற எண்ணமே!
அறைக்குள் நுழைந்ததுமே, துணி வாங்கிய பில்லுக்கான பணத்தை அவனுக்கு திருப்பி தர சொன்னதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.!!
"என்ன இது?"
"பில்லு மா பில்லு.. துணிக்கடை பில்லு... நீ வாங்கின துணிக்கு, நீ தான் பணம் செலவு பண்ணனும்.. நான் ஏன் பில்லு கட்டணும்?" என்றான் எகத்தாளமாக.
"என்னமோ பெரிய சவடால் விட்ட, தாலியே கட்டிட்டேன், ட்ரெஸ் எடுத்துத் தர மாட்டேனான்னு... இதான் அந்த வாங்கி தர மேட்டரா... "
"நான் உன் கூட கடைக்கு வந்து என் கிரெடிட் கார்டுல தானே வாங்கின... அதுக்கு இந்த பில் சர்வீஸ் சார்ஜ் ன்னு வெச்சுக்கோ.." என்றான் அவனும் எகத்தாளமாக.
"உனக்கு என்னை டெம்ப்ரரி (temporary) பொண்டிட்டியா ஆக்கின விதிய சொல்லணும்... கடவுளே இனிமே இந்த மாதிரி இம்சையோட என்னை கோர்த்து விடாத.." என்று புலம்பினாள்.
"நான் இம்சைன்னா, நீ அரைலூசு" என்றான் அவனும் கேலியாக.
"சீ பே..." என்க, அவனோ துணிக்கடை பில்லை அவள் கையில் திணித்தான்.
ஜிபே (GPAY) இருக்கா..." என்று அவள் கேட்க,
"யெஸ்." என்று நம்பரை கொடுக்கவும், அவளும் பணத்தை ஜிபே (gpay) மூலம் பணத்தை திருப்ப,
"அப்புறம் ஒரு சின்ன அட்வைஸ். உனக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்... உன் பெரிய கண்ணை இன்னும் விரிக்காத... பார்க்க சகிக்கலை." என்று சொல்லி அவள் கை ஓங்கும் முன், படுக்கையறைக்குள் சென்று மறைந்தான்.
இப்படியே இவர்கள் இருவரும் நாயும் பூனையுமாக (எலி பூனை சண்டை ரொம்ப பழசாயிடுச்சு!!) சண்டைப் போட, அந்த அறைக்கு மட்டும் பேசும் சக்தி இருந்திருந்தால், இந்நேரம் கத்தி அழத் தொடங்கியிருக்குமோ?? "என்னை யாராவது காப்பாத்துங்களேன்" என்று கதறி இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
யாழினியன் அறைக்குள் தன் செல்போனை நோண்ட, இவள் பொழுதுப் போகாமல், வெளியே உலாவலாம் என்று எண்ணி வெளியேறினாள்.
அந்தமானில் சுற்றிப் பார்க்க இல்லாத இடங்களா என்ன?
அனுலேகா, ரிசார்ட்டைத் தாண்டி வெகுதூரம் செல்லவில்லை. ஆனாலும் சற்றே ஒதுக்குப்புறமான ரிசார்ட் தான் அது. தனிமை விரும்பிகளுக்கு பிடிக்கக் கூடிய இடம்.
அவள் சுத்தமான கடற்கரையை ரசித்தபடி நடக்க, அவளுக்குள் ஓரு உள்ளுணர்வு, யாரோ தன்னை பின் தொடர்வதுப் போலத் தோன்றியது. யாரென்று திரும்பி பார்ப்பது தவறு என்ற எண்ணத்தில், மீண்டும் ரிசார்ட் செல்லும் பாதையில் திரும்பினாள்.
Adada ithenna Tom & Jerry mathiri adichukiranga,? Ada pavame yenda dress than vangi koduthuttela apram enna thiruppi kekkura panathai? Anuva parthathu yaru? Iniyan ah
ReplyDelete