கல்யாண சம்பந்தம் அத்தியாயம் 2


அத்தியாயம் - 2


அம்மா அம்மா... அம்மாஆஆஆ"

"ஏன்டா ஏலம் போடற..? இங்க தான இருக்கேன்..."

"அப்ப ஒரு தடவை கூப்பிட்டதுக்கே, 'என்ன' ன்னு கேட்டிருக்க வேண்டியது தானே...??"

"ஆமா நீ கூப்பிடறது எருமை மாடு,  'ம்ம்மா' ன்னு கத்தின மாதிரியே இருந்துச்சு டா.. அதான் எனக்கு ஒரு டவுட்ல (doubt) திரும்பி என்னன்னு கேட்கலை... இப்ப சொல்லு எதுக்கு கூப்பிட்ட??" என்று மகனை கேலி செய்துவிட்டு, எதுக்கு அழைத்தான் என்றும் கேட்டார்.

"சந்தடி சாக்குல என்னை எருமை மாடு ன்னு திட்டிட்டு, ஒன்னுமே தெரியாத மாதிரி என்னன்னு கேட்கிற... நீ சீரியல் பார்த்து பார்த்து நல்ல நடிக்க கத்துக்கிட்ட அம்மாவ்" என்க,

"ஐயையோ மறந்தே போயிட்டேன்... " என்று பதறியடித்து ஹாலுக்கு நகர்ந்தவரை, தடுத்து என்னவென்று விசாரித்தான் மகன். அவரின் தவிப்பு அவனுக்கு கிலியை கொடுதத்ததோ...!!

"என்னமா என்ன ஆச்சு.??. நீ ஏதோ மறந்த விஷயம் உனக்கு ஞாபகம் வந்துருச்சா" என்று பதற,

"ஆமா டா.. 'அவள் மென்மையானவள்' ன்னு ஒரு சீரியல்.. ஏற்கனவே பத்து நிமிஷம் போயிடுச்சு.. என்னங்க அடுப்புல சாம்பார் கொதிக்குது அதை அணைச்சிடுங்க... ஹாங்... அப்புறம் அப்பளம் பொறிக்க எண்ணெய் சட்டி காயுது அதையும் ஆஃப் பண்ணிடுங்க.. நான் இந்த சீரியலை பார்த்துட்டு வந்து மீதி வேலையைப் பண்ணிக்கிறேன்.." என்று கணவனுக்கு கட்டளையிட்டவர், டிவி முன் அமர்ந்துவிட்டார்.

மகன் காண்டாகி, "அம்மா இன்னும் வேற ஏதாவது வேலை இருக்கா..."

"எதுவாயிருந்தாலும் நான் அப்புறமா கேட்டுக்கறேன் டா... "

"பசிக்குது ம்மா..."

"அடேய் கலி (தன் மகனை)..., ஒரு அரை மணிநேரம் பொறுத்துக்கோடா... உங்க அம்மா கிட்ட, இப்ப நீ பேசினாலும் காதுல விழாது.."

"வெறும் அரைமணி நேரம் தானா...? இதுக்கு அப்புறம் சீரியல் பார்க்க மாட்டாங்க ன்னு நீ சொல்றியா ப்பா?" என்று நக்கலாக கேட்க,

"நீ வா நான் சொல்றேன்.. " என்று கூப்பிட்டு கிச்சனுக்கு சென்றார்..

"இப்படி சீரியல் பார்த்து இவங்க என்ன சாதிக்கப் போறாங்க? அதெல்லாம் பார்த்து டென்ஷன் ஆகுது... முழுக்க நெகட்டிவிட்டி தான்.." என்று பொறிந்துத் தள்ளியவனை புன்னகையுடன் பார்த்தார் அமுதராஜன்.

"டேய் அவங்களுக்கு வேற என்ன பொழுதுபோக்கு இருக்கு சொல்லு...?"

"அடப்போப்பா... இந்த ஒன்றரை வருஷ லாக் டௌன்ல எனக்கு அம்மா பார்க்கிற சீரியல் அத்தனைக் கதையும் ஒரே மாதிரி தான் தோணுது... இதோ இப்ப பார்க்கிறாங்களே.. அதுல அந்த ஹீரோயின் மூன்று வருஷமா கர்ப்பமா இருக்காம்... அதுக்குள்ள மாசமான பொண்ணை நிறைய கஷ்டப்பட வைக்கிறாங்களாம் வில்லிங்க... இதுல அம்மா ஃபீலிங்கு வேற.."

"..... ஹா ஹா ஹா..."

"சிரிக்காத அப்பா... அம்மா இதை சொன்னதும், எனக்கு ஒரு டௌப்ட் வந்துச்சு.. மூனு வருஷமாவா வயிறும் தெரியாம, குழந்தையும் பொறக்காம இருக்கு?"

"மகனே... உனக்கு புரியல... ஒரு நாளைக்கு அரைமணிநேரம் ஒரு சீரியல் போடுறாங்களா.. வாரத்துக்கு ஆறு நாளு ஒளிபரப்பு வெச்சுக்குவோம்.. அப்ப வாரத்துக்கு நாள் கணக்குல சொன்னா, மூன்று மணிநேரம் ஆகுது.. 

மாசத்துக்கு பன்னிரெண்டு மணிநேரம்.. ஒரு வருஷத்துக்கு, 52 வாரத்தை கணக்கெடுத்தா, 624 மணிநேரம் வருது.. அப்படின்னா 26 நாள் வரும்...  அந்த பொண்ணு 3 வருஷமா முழுகாம இருக்கு ன்னா, 78 நாள் தான் ஆகுது. கர்ப்பம் 60 நாள் கழிச்சு உறுதிப்படுத்தி இருந்தா, (60+78) இப்ப 138 நாள் தான் கர்ப்பம் ஆகியிருக்கும்.. 

சுருக்க சொல்லனும்னா, 4 மாசம், 18 நாள் ஆகியிருக்கும்.. இது தெரியாம, முன்று வருஷமா கர்ப்பமா இருக்கு.. இன்னும் குழந்தை பொறக்கல ன்னு கேலி பண்ணா எப்படி மகனே.." என்று ஒரு நீண்ட விளக்கத்தை, கேலியும் நக்கலும் கலந்து, கணக்கு வழக்கில் கூற, மகன் தலையை சொறிந்தான்.

"கணக்கு வாத்தியாரே கணக்கு நல்லா போடறீங்க...  அண்ட் லாஜிக்கலி யூ ஆர் ரைட் ப்பா..."

"தேங்க்ஸ் கலி"

"அப்பா.." என்று மகன் முறைக்க,

"உன்னை கிண்டல் பண்ணா, எனக்கு குதூகலாமா இருக்கு டா.."

"இருக்கும் ப்பா இருக்கும்... அப்பா... நீ சொல்ற கணக்குப் படி பார்த்தா, குழந்தை பொறந்து, வளர்ந்து, கல்யாணம் ஆகி, அதுக்கு ஒரு குழந்தை பிறக்கும் வரை, சீரியல் முடியாது... அப்படித்தானே.."

"அப்பையும் முடியாது டா..." தந்தையும் மகனும், கிண்டலும் கேலியுமாக பேசி முடிக்க, சாவித்திரி சீரியலை பார்த்து முடித்து விட்டு, வர, மூவரும் மதிய உணவை உண்ண தொடங்கினர்.

உணவு உண்ணும் நேரத்தில் பேசக்கூடாது என்பது அந்த வீட்டின் எழுதப்படாத சட்டம்..

ஆனால் சாவித்திரியால் பேசாமல் உணவு கவளம் உள்ளே இறங்காது என்பதால், இருவருக்கும் முன்னே, தான் முதலில் சாப்பிட்டு முடித்துவிட்டு, அவர்கள் அருகே அமர்ந்து பேசியபடியே பரிமாறுவார்.

கணவன் மகன் எவ்வளவு கூறியும், அந்த பழக்கத்தை மாற்ற இயலவில்லை. அவர்களும் சொல்லி பார்த்துவிட்டு அமைதியாகி விட்டனர்.

சாவித்திரி, "டேய் நாளைக்கு நாள் நல்லாருக்கு, நாம ஒரு வீட்டுக்குப் பொண்ணுப் பார்க்கப் போறோம்.." என்று மகனிடம் அறிவித்தவர், 

கணவனிடம், "என்னங்க... உங்க போனில், மேட்ரிமோனி சைட்டுக்குப் போய், அந்த பொண்ணு போட்டோ எடுத்துக் காமிங்க" என்று உத்தரவு பிறப்பித்தார்.  

அதை கேட்டு, கலியபெருமாள் மூர்த்திக்கு, உணவு தொண்டையில் சிக்கி புரை ஏறியது... அன்னை தலையில் தட்ட, தந்தை தண்ணீரை அவன் பக்கம் நகர்த்திவிட்டு, கருமமே கண்ணாக, பெண் புகைப்படத்தை தன் அலைபேசியில் காண்பித்தார்.

மகன் தந்தையின் போனை கையில் வாங்காமல், அவரையே முறைத்துப் பார்த்திருந்தான்.

"அப்பாவை என்னடா முறைப்பு.. பொண்ண பாரு.. உனக்கு பிடிச்ச மாதிரி செலக்ட் பண்ணிருக்கேன்" என்றார் பெருமிதமாக.

"ம்ம்க்கும்.. இதென்ன, துணியா.. இல்ல பனியன் ஜெட்டியா? எனக்கு பதிலா நீ போய் செலக்ட் பண்ணறதுக்கு... அதெல்லாம் முடியாது. எனக்கு ஏத்த பொண்ணை, நான் தான் தேர்ந்தெடுப்பேன்.. அதனால அந்த வீட்டுக்கு போன் பண்ணி வரலைன்னு சொல்லிடுங்க.."

"சும்மா ஒரு மரியாதைக்கு போய் பார்த்துட்டு வரலாம் டா... அங்க வந்து பொண்ண பிடிக்குது பிடிக்கலன்னு முடிவு பண்ணிக்கலாம்.."

"முடியாது ம்மா.. ஒரு பொண்ண நேர்ல போய் பிடிக்கலன்னு சொன்னா எவ்வளவு கஷ்டமா இருக்கும்.. அவங்க அப்பா அம்மா எவ்ளோ வருத்தப்படுவாங்க.. அந்த தப்ப நான் பண்ண மாட்டேன்" என்றான் திட்டவட்டமாக!!

"அப்ப அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ.. அவங்ககிட்ட நான் என் பையன் என் பேச்சை தட்ட மாட்டான்னு வேற பெருமையா சொல்லிட்டு வந்தேன் தெரியுமா.."

"அதுக்கு... நான் என்ன பண்ண முடியும்.. ?"

"டேய் அம்மாவை கெஞ்ச வைக்கிறது பாவமில்லயா.. இந்த ஒரு தடவை கூட வாடா.. அடுத்த தடவை நீ ஓகே சொன்னா தான் அடுத்த ஸ்டெப்" என்று ஒரு முடிவுக்கு அவனை வரவழைத்தார்.

"அந்த வீட்டுக்கு நான் வரேன்.. ஆனா பிடிக்குது பிடிக்கலை எதுவும் சொல்ல மாட்டேன்.. நீயா ஏதாவது பேசி அவங்க மேல பேச விடாம பண்ணிட்டு வர.. ஓகே?"

"டீல்"

மறுநாள் மாலையில் பெண் வீட்டுக்கு கலி குடும்பம் சென்றது.. அங்கே, பெண்ணின் தந்தையும், தாயும் இவர்களை வரவேற்று உபசரித்தார்கள்.

பெண்ணின் தந்தை, "எனக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு.. பையன் சிஸ்கோல வேலை பார்க்கிறான்..  டைரக்ட் அப்பாயின்ட்மெண்ட்.. யூ எஸ் ல எம்.எஸ் முடிச்சுட்டான் . இப்ப அவன் க்ரீன் கார்ட் க்கு அப்ளை பண்ணிட்டான் வேற.. சிடிஸின்ஷிப் வந்திரும் தெரியுமோ?"

"சார் க்ரீன் கார்ட் வேற சிடிஸின்ஷிப் வேற.. ரெண்டும் ஒன்னு கிடையாது.. க்ரீன் கார்டு அங்க நிரந்தரமா வாழவும், வேலை செய்யவும் தர அனுமதி.. சிடிஸின்ஷிப் ன்னா குடியுரிமை.. அது உங்களுக்கு தெரியுமா?.."

பெண்ணின் தந்தை அசடு வழியும் தருணம் அவர்களுக்கும் பாவமாக இருந்ததோ? ஆனால் அதற்குள் அவரும் சுதாரித்துக் கொண்டார்.

"பரவாயில்லையே.. பையனுக்கு இந்த விவரம் கூட தெரியுதே.. சீக்கிரம் நீங்களும் யூ.எஸ் ல செட்டில் ஆகப் பாருங்க.. யூ. எஸ் ன்னா சும்மாவா?"

'நான் ஏன் சொந்த நாட்டை விட்டுட்டு, அடுத்த நாட்டுல ஏலியன் மாதிரி வாழனும்.. அதென்ன யூ.எஸ் ன்னா அவ்ளோ பெருமையோ??' என்று முணுமுணுத்தான்.. அதை கேட்ட சாவித்திரி, உதடு துடிக்க, சிரிப்பை அடக்கினார்.

அங்கே மூன்று கப்பிலும், தட்டிலும், ரவா கேசரியும், வாழைக்காய், உருளைக்கிழங்கு பஜ்ஜியும் கொண்டு வைத்தனர்.

அதை பார்த்து, கலி சாவித்திரியின் காதில், "அம்மா இவங்க இன்னும் பழைய பஞ்சாங்கமா சொஜ்ஜி பஜ்ஜி தராங்க.  ம்ம்ம் எனக்கு செட்டாகும் தோணலை... வா கிளம்பு" என்க

"பையன் என்ன சொல்றாப்புல?" என்று பெண்ணின் தந்தை வினவ, 

"ஹி.. ஹி.. அதாவது கேசரியும் பஜ்ஜியும் நல்லாருக்கு ன்னு சொல்றான்.."

"ஓ.. உங்க மூன்று பேருக்காக கடையில் ஆர்டர் பண்ணி வாங்கினோம்.. "

"ஓ.. உங்களுக்கு ஸ்வீட் ஏதும் வாங்கலயா?" என்று கலி அவரை போலவே, ஏற்ற இறக்கத்தை பேச்சில் கொண்டுக் கேட்க,

"நோ நோ.. நானும் ராஜும் (பெண்ணின் தந்தை) கேட்டோ (keto) டயட் ஃபாலோ பண்றோம்.. சோ நோ சுகரி பிராடக்ட்ஸ்.. எப்படி தான் மத்தவங்க சாப்பிடறாங்களோ..??! இதெல்லாம் சாப்பிட்டு குண்டாகி.. சே.. சே" என்று தோளை குலுக்க, அதற்கு பிறகும், மூவரும் சாப்பிடுவர்களா என்ன?!

"ஏங்க.." என்று சாவி கொந்தளிக்க, கலி கையை அழுத்தி அன்னையை அடக்கினான்.. பின், "கொஞ்ச நேரம், இங்க எது நடந்தாலும் அமைதியா கவனி... நோ டாக்ஸ் (talks) ஓகே??"

"ஓ.. அப்ப உங்க பொண்ணு என்ன சாப்பிடுவாங்க?"

"அவ கம்ப்ளிட்லி வேகன் (completely vegan).." என்று பெண்ணின் அம்மா.. சொல்லும் போதே, பெண் அங்கே வந்துவிட்டாள்.

"நாங்க கூப்பிடாம ஏன் வந்த கண்ணம்மா?" என்று அவர்கள் அவளை கேட்க, மென்மையாக தான்!! 

அவளோ "ம்மா.. நோ ஃபார்மலிட்டிஸ் (formalities). இப்படி யாரோ ஒருத்தனை வீட்டுக்கு கூட்டிட்டு முயூசியம்ல காட்டிட்டு இருக்கற மாதிரி என்னை பார்க்கிறதே எனக்கு பிடிக்கல.. இதுல....! கொஞ்சம் சும்மா இருங்க... நான் அந்த பையன் கிட்ட பேசிட்டு வரேன்.." என்று எதிரே இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்துக் கொண்டாள். அவள் பேசியது எல்லாம். நடுக்கூடத்தில் தான்.. 

சபை நாகரிகம் கருதி, கலி குடும்பமும், அவளை பெற்றவர்களும் அமைதியாக தான் இருக்க வேண்டியிருந்தது.

"ஹாய் ஐம் அகல்யா.. நீங்க?"

"ஐம் கலிய..."

"வாட்டெவெர்.. எனக்கு இந்த கல்யாணத்துல சில கண்டிஷன்ஸ் இருக்கு... அதுக்கு நீங்களும் உங்க பேமிலி யும் ஒத்து வந்தால், நெக்ஸ்ட் ஸ்டெப் யோசிக்கலாம்"

"யா.. கோ யஹெட் (go ahead)" என்று அவனும் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அவள் கண்களை நோக்கினான்.

"எனக்கு உங்க பேரெண்ட்ஸ் கூட ஒன்னா சேர்ந்திருக்க எந்த ஆப்ஜெக்ஷன் இல்ல.. பட் என்ன அனாவசியமா கேள்வி கேட்க கூடாது.. 

எனக்கு சமைக்க தெரியாது.. இனிமேலும் கத்துக்கற ஐடியா இல்ல.. சோ உங்க அம்மா சமையலை மிஸ் பண்ண வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு வராது. ஒருவேளை, உங்க அம்மாக்கு சமைக்க கஷ்டமா இருந்தா, வெளிய ஆர்டர் பண்ணி சாப்பிட்டுக்கலாம்.. அதான் இப்ப swiggy, zomato இருக்கே.. சோ கிச்சன் போக சொல்லி என்ன டார்ச்சர் பண்ண கூடாது..

அண்ட் மூன்றாவது, எனக்கு ஷிஃப்ட் பேசிஸ் வேலை.. சோ எப்ப வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வருவேன்னு சொல்ல முடியாது.. அண்ட் மோஸ்ட்லி ஆஃபீஸ் கேப் எடுக்காம, என் ஃபிரெண்ட்ஸ் கூடத்தான் வருவேன்.. அதனால என்னை சந்தேகப்படக் கூடாது.

குழந்தை விஷயம்.. நான் நினைச்சா மட்டும் தான் நடக்கணும்.. அண்ட் எனக்கு குழந்தை பராமரிப்பு கொஞ்சம் அல்லர்ஜி.. டயபர் சேஞ்ச் பண்றது, ஃபீட் பண்றது.. நோ வெய்.. யக்..

அண்ட் என்னை ஏதாவது வீட்டு வேலை செய்ய சொல்லி போர்ஸ் பண்ணா, என் ஃப்ரீடம்க்கு ஏதாவது பங்கம் வந்தா, நான் உங்களை டிவோர்ஸ் பண்ணிடுவேன்..

அண்ட் முக்கியமா, என் சம்பள பணத்தை எக்காரணம் கொண்டும் கேட்க கூடாது.. ஏன்னா என் அம்மா அப்பாவை கூட இதுவரைக்கும் நான் கேட்க விட்டதில்லை.. சோ மை மணி மை ரூல்  (my money my rule) இது தான் என்னோட ப்ரின்சிபில் (principle).." என்று சொல்லி முடிக்க, அங்கே ஈ யாடும் சத்தம் கூட கேட்காமல் நிசப்தமாக இருந்தது.

மீண்டும் அந்த பெண், "உங்களுக்கு ஏதாவது கேட்கணும், சொல்லணும் ன்னு இருந்தா, சொல்லுங்க.. பட் மேக் இட் பாஸ்ட்.. எனக்கு டைம் இல்ல.. வெளிய போகணும்" 

"ஓகே.. என்னோட கண்டிஷன்ஶ் ரொம்பவே சிம்பிள். இப்ப, நீங்க சொன்ன அத்தனையும், எழுதி கையெழுத்துப் போட்டு தரணும்..

உங்க ப்ரின்சிபில் சொல்லிடீங்க.. அதே மாதிரி.. எக்காரணம் கொண்டும், என் பணத்தையோ, என் பேரெண்ட்ஸ் பணத்தையோ நீங்க கேட்கக்கூடாது..

உங்களுக்காக என் அம்மா சமைக்கணும் நினைக்கிறது எனக்கு ஒத்து வராது.. அதான் swiggy zomato இருக்கே.. சோ யூ கேன் கேரி ஆன் வித் தட்.

அண்ட் என்னையோ என் பேமிலியையோ தர குறைவா பேசறது ஸ்ட்ரிக்ட்லி நோ.. 

அண்ட் பிரெண்ட்ஸ் கிட்ட உங்களை என் வைஃப் ன்னு சொல்லி இன்ட்றோ கொடுக்க மாட்டேன் பிகாஸ் உங்க அணுகுமுறை என்னால ஒரு நாள் சகிச்சுக்க முடியாம போறதுக்கு வாய்ப்புகள் அதிகம்.. சோ அடுத்த நாளே கூட நாம, டிவோர்ஸ் சைன் பண்ண வேண்டியது வரும்" என்றவன் எழுந்து,

"குழந்தை விஷயம் சொன்னீங்கள்ல.. இதே கண்டிஷன் உங்களை பெத்துக்கும் முன்னாடி, அவங்க யோசிச்சிருந்தா நல்லாருந்திருக்கும்.. " என்று கூறி வெளியே நடந்துவிட்டான்.

Comments

  1. கதையோட லாஸ்ட் லைன் வேற லெவல் அக்கா. செமயா இருந்துச்சு👌👌👌. எனக்கு ரொம்ப பிடிச்சது. செமயா எழுதி இருக்கீங்க👏👏👏. இரண்டாவது எபி செமயா இருக்கு. I love it 😍😍😍.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஏதோ சொல்ல நெஞ்சம் துடிக்குதே - அத்தியாயம் 3

ஏதோ சொல்ல நெஞ்சம் துடிக்குதே - 6

ஏதோ சொல்ல நெஞ்சம் துடிக்குதே - அத்தியாயம் 8