கல்யாண சம்பந்தம்





அத்தியாயம் - 1


இங்க பாருடா... இந்த பொண்ணு எவ்வளவு அழகா இருக்கு... 

"அம்மா ஏன் ம்மா ஏன்...? வேலை செய்ய விடுமா" 

"இந்த பொண்ணு சீரியல்ல நடிக்கப் போயிடுச்சே டா... இல்லாட்டி இந்த பொண்ணு எங்க இருந்தாலும் தேடி அவளை பெத்தவங்க கிட்ட சம்பந்தம் பேசியிருப்பேனே?!!"

"உலகமே ஒரு நாடக மேடை ன்னு ஷேக்ஸ்பியர் சொல்லிருக்கார் சாவித்திரி.. அதனால நடிகையாயிருந்தா என்ன? சம்பந்தம் பேசலாம் ஆனா ஒரு சிக்கல் இருக்கே!!" என்று யோசனை செய்வதுப் போல ஓரக்கண்ணால் நோட்டம் விட

"என்னங்க சிக்கல்?"

"இல்ல சாவி, நான் என்ன சொல்ல வரேன்னா, அந்த பெண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருந்துச்சுன்னா?"

அவரது சாவியோ, தலையில் அடித்துக் கொண்டு, "இந்த மனுஷனுக்கு கொழுப்பைப் பார்த்தியா டா" என்று மகனிடம் செல்ல,

"எதுவாயிருந்தாலும், அப்படி ஓரமா உட்கார்ந்துப் புருஷனும் பொண்டாட்டியும் பேசுங்க.. எனக்கு இங்க டிஸ்டர்ப் ஆகுது" என்று பையன் தன் பங்குக்கு எகிற..

"ம்க்கும்.. எந்நேரமும் இந்த லேப்டாப் பொட்டியோட இருந்தா, கல்யாணம் எப்படி ஆகும்?... சாமியாரா தான் போகணும்" என்கவும், அப்பாவும், மகனும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

பிறகு, "அம்மா இன்னிக்கு தேதில, நான் தான் சாமின்னு சொல்ற சாமியார்களை தான் போலீஸ் பிடிக்குது... முக்கால்வாசி பேருங்க பாலியல் கேஸ்ல தான் சிக்கறாங்க.. அவங்களோட என்னையும் சேர்க்கறீயே ம்மா... உனக்கே தெரியும் நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன்.." 

"உனக்கு லவ் பண்ணவாவது தெரியுதா?"

"என்ன ம்மா இப்படி சொல்லிட்டியே... என் தாய் என்னும் கோயிலை..."

"சே சே நிறுத்துடா... ஒப்பாரி வைக்கற.. லவ் பண்ண தெரியுமான்னு தானே கேட்டேன்?"

"ஐ லவ் யூ ம்மா... ஐ லவ் யூ ப்பா" 

"ஐ லவ் யூ டூ மகனே" என்று அமுதராஜன் கூறினார் நமட்டு சிரிப்புடன்.

அங்கே சாவி பத்ர காளி போல கண்களை உருட்டி கணவன் பக்கம் பார்வையை வீசினார் அதில் அவர் கப்சிப்.

"ஒரு பெண்ணை உஷார் பண்ண தெரியுதா?.. வந்துட்டான் ஐ லவ் யூ ம்மா சொல்லிட்டு"

"யம்மா..."

"இந்த மாங்கல்யம் தந்துநானேனா ன்னு ஒரு சீரியல்.. அதுல ஹீரோ ஆகாஷ் ஹீரோயின் அனிதாவை லவ் பண்ணி அவளோட எதிர்ப்பையும் மீறி தாலி கட்டிடுவான்.. அப்புறம் அவளும் அவனை லவ் பண்ணுவா... இந்த மாதிரி.."

"அம்மா இதோட நிறுத்திக்கோ... அம்மா மாதிரியா பேசற...? உன் பிளான் எல்லாம் என்னை ஜெயிலுக்கு அனுப்பற மாதிரியே இருக்கு... மீ ரொம்ப பாவம்.. சின்ன வயசுல இருந்து நான் சொகுசாவே வளர்ந்துட்டேன்... இந்த காலத்துல அந்த மாதிரி தூக்கிட்டு வந்து தாலி கட்டறது எல்லாம் அடாவடித்தனம்... கட்டின தாலியை கழட்டிக் கொடுத்து நேரா மகளிர் காவல் நிலையத்துக்கு போவாங்க.. அங்க என்னை டின்னு கட்டிடுவங்க.. அண்ட் ரொம்ப முக்கியமா, நீ என்னை வளர்த்தது சரியில்ல ன்னு உன்னை தான் சொல்லுவாங்க... சானிய கரைச்சு மூஞ்சில ஊத்துவாங்க.."

"மகனே உன் அம்மாவுக்கு உன் மேல எம்புட்டு பாசம் பார்த்தியாடா?"

"நீர் மட்டும் என்ன? எனக்கு சோறு வெச்சீங்களே... ஒழுங்கா பேர் வைக்க தெரிஞ்சுதா... கலியபெருமாள் மூர்த்தி
ன்னு ஒரு பேர்"

"அந்த பேருக்கு என்னடா குறைச்சல்? அது எங்க அப்பா பேரு..!!" என்றார் சாவித்திரி உடனே..

"தாத்தா காலத்துப் பேரை வெச்சிட்டு வரேன்னு தான் பல பொண்ணுங்க ரிஜெக்ட் பண்ணுது.. நீயே சொல்லு என் பேரை எப்படி சுருக்கினாலும் நல்லாருக்கா?"

"மகனே, கலி ன்னு வெச்சுக்கோ.. ட்ரெண்டியா இருக்கும்"

"கலி(க்கு) முத்திப் போச்சு ன்னு எனக்கு பைத்தியம் பட்டம் கட்டவா?"

"அப்ப பெருமாள்" என்று சாவி கேட்க,

"பெருமாள் பிச்சை" ன்னு சொல்றாங்க ம்மா"

"டேய் கடவுள் பேர் டா... சாமி குத்தம் ஆயிடும்"

"அப்ப மூர்த்தி ன்னு வெச்சுக்கோ மகனே"

"யப்பா வாயில வந்திரும் சொல்லிட்டேன்.."

"இந்த காலத்துல ட்ரெண்டி பேர் ன்னா என்னடா..?" சாவியின் கேள்வி இது..

அதற்கு அமுதராஜன், "அப்பு, பப்பு... இப்படி ஷார்ட்டா இருக்கணும்..
 இல்லன்னா, வாயில நுழையாத பேரா இருக்கணும்" என்றார் கிண்டலாக

"உங்களை... போங்க, போய் காய் வாங்கிட்டு வாங்க" என்று மனையாள் எகிற, அவரும் இடவலமாக தலையாட்டியப்படியே புன்னகையுடன் கிளம்பினார்.

சாவி கிச்சன் செல்ல, அப்போது, "ஆன்ட்டி" என்ற குரல் கேட்டு வெளியே திரும்பினார்.

"என்னமா" என்று கேட்டார் புன்னகை முகமாக.

"ஆன்ட்டி உங்க கிட்ட எக்ஸ்ட்ரா பால் பாக்கெட் இருக்குமா?"

"இருக்கே உள்ள வாம்மா.. உட்காரு.." என்று அழைத்து வந்து அவர் பையன் அமர்ந்த சோபாவில் ஒரு பக்கத்தில் அமர வைத்தார்.

"இல்ல ஆன்ட்டி டைமாயிடுச்சு.."

"அட உட்காரு ம்மா... இப்ப வரேன்.. இவன் என் பையன்.. பேரு...." என்றவரை, மகன் முறைக்க,

"அது கிடக்கு... நீங்க பேசிட்டு இருங்க.. நான் இப்ப வரேன்" என்று உள்ளே செல்ல, அவனோ, "அம்மா அம்மா" என்று பல்லைக் கடித்தான். அதை காதில் வாங்கினால், அவர் சாவித்திரி அல்லவே..

ஒரு கணம் முழித்தவன், வந்த பெண்ணிடம், "நீங்க பேசிட்டு இருங்க.. நான் இதோ வந்திரேன்.."

"ஹான் என்ன? யார்க்கிட்ட பேச சொல்றான் இவன்" என்றாள் அவள்..

சமையலறையில் அவன், "என்னமா யாரோ ஒரு பொண்ணு வந்ததும், உட்கார வெச்சு டீயை போட்டுட்டு இருக்க.. யார் அது?"

"பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்காங்க டா.. பொண்ணு எவ்வளவு லட்சணமா இருக்கா பாரு.. உன் கூட பக்கத்துல உட்கார வெச்சா, ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு... இவளுக்கு ரெண்டு அண்ணா, ஒரு அம்மா இருக்காங்க"

"எல்லாருக்கும் ஒரு அம்மா தான் ம்மா இருப்பாங்க"

"டேய் டங்க் ஸ்லிப் ஆயிடுச்சு டா.. மீதி விவரத்தை, அந்த பொண்ணுகிட்ட நான் பேச்சு கொடுத்து தெரிஞ்சுக்கறேன்.. உனக்கு ஒன்னும் தெரியாது.. நீ வா நான் சொல்றேன்" என்று டீயுடன் நகர்ந்து விட்டார் சாவித்திரி.

"இந்தாம்மா டீ.."

"எதுக்கு ஆன்ட்டி இதெல்லாம்...? பால் மட்டும் கொடுத்தீங்கன்னா" என்று அந்த பெண் தயங்க...

"அட டீ தானே ம்மா... பக்கத்து வீட்டுல இருக்கீங்க.. நான் இது கூட செய்ய மாட்டேனா?"

"தேங்க்ஸ் ஆன்ட்டி"

"ஆமா எதுக்கு மா பாலு... இன்னிக்கு பால் வரலையா உங்களுக்கு?"

"வந்துச்சு ஆன்ட்டி.. ஆனா காலைல பால் பாயசம் பண்ணி காலி ஆயிடுச்சு.. இப்ப திடீர்னு வந்து என் ஹஸ்பண்ட் பால் பொங்கல் கேட்டாரு. அதுக்கு தான்.. இன்னிக்கு எங்களுக்கு வெட்டிங் டே ஆன்ட்டி... அதான்.. ஓகே ஆன்ட்டி...நான் ஈவினிங் உங்களுக்கு பால் வாங்கி தரேன்"

"ஹான் ஹஸ்பண்டா..." என்று ஸ்தம்பித்து விட்டார் சாவித்திரி.

அன்னையின் அதிர்ச்சியையும், அப்பெண்ணின் குழப்பமான முகமும் சேர்ந்து, அவனுக்கு சிரிப்பே முதன்மையாக வந்தது. பின்பு, மேலே உத்தரத்தை பார்த்து கை தூக்கித் தலையாட்டிவிட்டு, அப்பெண்ணிடம் திரும்பி,

"அக்கா... பால் எங்களுக்கு வேணாம் க்கா... நீங்க போங்க க்கா... தம்பி நான் உங்களுக்கு ஈவினிங் பால் பாக்கெட் வாங்கி தரேன்... எவ்ளோ வேணும்னு சொல்லுங்க அக்கா... "

"என்னது அக்காவா?" என்று அந்த பெண் அதிர்ச்சியாக...

"யக்கா நீங்க இந்த தம்பியை நம்புக்கா.." என்று கையெடுத்துக் கும்பிட,

"அவள் கிளம்பி வெளியே செல்லும் சமயம், "குடும்பம் மொத்தமும் லூஸா இருக்குமோ.." என்று அவள் புலம்பி செல்வதைக் கேட்ட அமுதராஜன், சந்தேகத்துடன் உள்ளே வந்தவர் என்ன என்று விசாரித்தார்.

அதுவரை அதே ஸ்தம்பித்த நிலையில் இருந்த சாவியை முறைத்துக் கொண்டிருந்தான் கலியபெருமாள் மூர்த்தி

பின் தந்தையிடம் நடந்த கதையை விவரிக்க, அங்கே முரசு கொட்டும் சத்தம் அளவுக்கு சிரிப்பொலி எழுந்தது.
அந்த சிரிப்பொலி பக்கத்து வீட்டிலும் கேட்க, அங்கே பெண்ணின் மாமியார்.."எவ்வளவு கலகலப்பான குடும்பம் பாரு.. அவங்களுக்கு பொண்ணு இருக்கான்னு கேட்டு, நம்ம கடைக்குட்டி ஹரிஷுக்கு சம்பந்தம் பேசலாமா.. நீ என்னமா நினைக்கிற?" என்று தன் மூத்த மருமகளை வினவினார்.

Comments